Thursday, March 3, 2011

கொடூரனுக்கு பாடம்.

பீளமேடு -ஹோப்காலேஜ், ராஜலட்சுமி நகரில், பொது மக்களால் வளர்க்கப்பட்ட வேம்பு, இலுப்பை உள்ளிட்ட எட்டு மரங்கள் சில நாட்களுக்கு முன் வெட்டப்பட்டன. அவை மீண்டும் துளிர்த்து விடாமல் தடுக்க அம்மரங்களில் வேர் பகுதியில் அமிலமும் ஊற்றப்பட்டிருந்தது. தகவலறிந்த அப்பகுதி பொதுமக்களும், கொங்கு நாடு முன்னேற்றக்கழக நிர்வாகிகளும் பீளமேடு போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரித்து, பக்கத்து வீட்டைச் சேர்ந்த இன்ஜினியர் சம்பத்குமார்(51) என்பரை கைது செய்தனர். அவர் மீது பொதுச்சொத்துக்கு சேதம் மற்றும் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட சம்பத்குமார் சார்பில் ஜாமீன் கேட்டு வக்கீல் மாதவன், கோவை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதி பாஸ்கரன் மனுவை விசாரித்து சம்பத்குமாருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதன்படி, வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பான 12 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும். 10 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பில் இருநபர் ஜாமீன் வழங்க வேண்டும். முக்கியமாக, வெட்டி சாய்க்கப்பட்ட எட்டு மரங்களுக்கு பதிலாக, குற்றம் சாட்டப்பட்ட இன்ஜினியர் வசிக்கும் பகுதியைச் சுற்றி 40 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். கோர்ட் உத்தரவிட்ட 10 நாள்களில் மரக்கன்றுகளை நட்டு முடித்திருக்க வேண்டும் என நீதிபதி பாஸ்கரன் நிபந்தனை விதித்துள்ளார்.
-நன்றி- தினமலர்.

No comments:

Post a Comment